கிளிநொச்சி பெண் கூட்டு பாலியல் வன்புனர்வு; சபையில் சிறீதரன் எம்.பி. கடும் சினம்
கிளிநொச்சி பெண் கூட்டு பாலியல் வன்புனர்வு சம்பவத்தில் பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்யாதது ஏன் என சிறீதரன் எம்.பி. நாடாளுமன்றில் கடும் சினம் வெளியிட்டார்.
கிளிநொச்சி மாவட்டம் சாந்தபுரம் கிராமத்தில் கடந்த நவம்பர் 11 ஆம் திகதி, 16 முதல் 23 வயதுக்குட்பட்ட 7 இளைஞர்களால் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், புங்குடுதீவு வித்தியா படுகொலைக்குப் பின்னர் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் இது எனவும் சிறீதரன் எம்.பி. நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் மீதான குற்றச்சாட்டு
சம்பந்தப்பட்ட 7 பேரையும் கைது செய்ய வலியுறுத்தியும், அவர்களுக்காகச் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது எனக் கோரியும் சாந்தபுரம் மக்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, பொலிஸார் அதற்கு இடையூறு விளைவித்துத் தடுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நியாயம் கோரிய மக்களின் போராட்டத்தைத் தடுத்ததன் நோக்கம் என்னவெனவும் சிறீதரன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
2009 யுத்தத்தின் பின்னர் சாந்தபுரம் மக்களை மீள்குடியேற்ற அப்போதைய அரசாங்கமும் இராணுவமும் மறுத்ததாகவும், உண்மை நிலை வெளிச்சத்திற்கு வந்த பின்னரே அம்மக்கள் குடியமர்த்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் காரணமாக ஏற்பட்ட வெறுப்புணர்வு இன்றும் பொலிஸார், பாதுகாப்புத் தரப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் மத்தியில் நீடிப்பதாக சிறீதரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
போர் வடுக்களுடன் வாழும் சாந்தபுரம் மக்கள் இன்றும் திட்டமிட்ட போதைப்பொருள் பாவனைக்கு உள்ளாக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இக்கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயங்குவதாகவும், பொலிஸார் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாகவும் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.