யாழில் வீடு புகுந்து தூக்கத்தில் இருந்த பெண்களை அச்சுறுத்திய கும்பல்!
யாழில் நேற்றிரவு இனந்தெரியாத கும்பல் ஒன்று வீடொன்றிற்குள் புகுந்து அங்கிருந்த சொத்துகளை சேதம் ஏற்படுத்தியுள்ளதுடன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (14) நள்ளிரவு யாழ்ப்பாணம் அரசடி மற்றும் பழம் வீதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவது, மோட்டார் சைக்கிளில் வந்த 25 க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று அரசடி வீதி பகுதியில் இரண்டு வீடுகளை அடித்து உடைத்து சேதம் விளைவித்ததுடன், அரசடி வீதி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வீட்டின் கதவுகள் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. அதே கும்பல் பழம் வீதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து தூக்கத்தில் இருந்த பெண்களை அச்சுறுத்தி அடாவடி ஈடுபட்டதுடன் கதிரைகள் மேசைகள் கண்ணாடிகளை அடித்து சொத்துகளை சேதப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில் பழம் வீதியில் உதயசூரியன் சுதர்சன் என்ற இளைஞன் தலையில் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தினை மேற்கொண்டவர்கள் நல்லூர் அரசடி நான்காம் ஒழுங்கையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விரிவான விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட நிலையில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.