முச்சக்கரவண்டிகளைத் திருடி விற்ற கும்பல் கைது
முச்சக்கரவண்டிகளைத் திருடி அவற்றின் இயந்திரங்கள் மற்றும் செஸி இலக்கங்களை மாற்றியும், வர்ணங்களை மாற்றியும் மீண்டும் விற்பனை செய்து வந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதியில் நபரொருவர் தமது முச்சக்கரவண்டி திருடப்பட்டதாக வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், நுகேகொடையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையின் போதே சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

பல பகுதிகளில் திருட்டு
கைதானவர்கள் அங்குருவெல்ல மற்றும் குருவிட்ட பகுதிகளைச் சேர்ந்த 28 முதல் 43 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்ட 11 முச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
பலாங்கொடை, பதுளை, பத்தரமுல்ல மற்றும் மிரிஹானை ஆகிய பகுதிகளில் இருந்து குறித்த முச்சக்கரவண்டிகள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளை தலா 12 முதல் 13 இலட்சம் ரூபாய் வரையான விலைக்கு விற்பனை செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாளை (12) நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.