கைதாவதை தடுக்கக் கோரி கம்மன்பில தாய்லாந்திலிருந்து ரிட் மனு தாக்கல்
தற்போது தாய்லாந்தில் இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, தாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தமது சட்டத்தரணி மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டமை தொடர்பாக ஊடக சந்திப்பொன்றில் கருத்தொன்றை தெரிவித்திருந்தார்.
அரசியலமைப்பின் 14(1) பிரிவின் கீழ் இது பேச்சுச் சுதந்திரமாக இருந்தாலும், அந்த உரை சமூக பிரிவிணை மற்றும் இனவாதத்தை தூண்டும் வகையில் இருந்ததாகக் கூறி சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டத்தின் 3(1) பிரிவு மற்றும் குற்றவியல் சட்டத்தின் 120ஆம் பிரிவு கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விசாரணையின்றி தன்னைத் தடுத்து வைக்க சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது கருத்துக்கள் எந்தவொரு இனக்குழுவையும் இலக்கு வைக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகளை குறிவைத்து தெரிவிக்கப்பட்டது என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமது கருத்துகள் தொடர்பான குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணைகள் அரசியல் பழிவாங்கலுக்கு சமமானது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.