தமிழக முதலமைச்சர் மு.க ஸ்ராலினை சந்தித்த கஜேந்திரகுமார் குழு
இந்தியா சென்றுள்ள (18) கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவையினர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ராலினை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினர்.
சந்திப்பில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், அக்கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுகாஸ் கனகரத்தினம், கொள்கைப் பரப்புச் செயலாளர் நடராஜா காண்டீபன், தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்.

தனித்தனியான கோரிக்கை
இதன்போது தமிழ்த்தேசியப் பேரவையினரால் இலங்கை அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், புதிய அரசாங்கம் உருவாக்கவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய சமஸ்டி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்குத் தமிழக அரசு இந்திய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொருளாதார ரீதியாகப் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள இலங்கை அரசாங்கம் இந்தியாவின் பங்களிப்பின்றி வளர்ச்சியடைய முடியாது. தமிழகத்தோடு பொருளாதார ரீதியில் நெருக்கமான உறவையும் தொடர்பாடலையும் உருவாக்காமல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியென்பதும் பாரிய சவாலாகவே இருக்கும்.
இதன் பின்னனியில் இலங்கையின் மீது கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தி, தமிழர்கள் விரும்பும் தீர்வை இந்தியாவினால் சாத்தியமாக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்தி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காணத் தமிழக அரசு தலையிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள். சந்திப்பின் முடிவில் தமிழ்த்தேசியப் பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிய அரசியல் அமைப்புத் தொடர்பாகவும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டும் பிரச்சினை தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்ராலினிடம் தனித்தனியான கோரிக்கைக் கடிதங்களைக் கையளித்தார்.
முதலமைச்சரின் சந்திப்பின் பின்னர் ஏனைய கட்சிகளின் தலைவர்களையும் விரைவில் சந்திக்கவிருப்பதாகத் தமிழ்த் தேசியப் பேரவையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின்போது இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனும் கலந்துகொண்டிருந்தார்.