குடும்பத்தினரின் கொடூர தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த சிறுமியின் இறுதிக் கிரியைகள்
தந்தை மற்றும் சித்தப்பாவால் அடித்துக் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிறுமி நிபுனி நுவந்திகா பண்டாரவின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
சிறுமியின் பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலம் நேற்று இரவு அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சிவ சுப்ரமணியத்தினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன் உடல் உறுப்புகள் மேலதிக பரிசோதனைக்காக இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உறவின பெண் ஒருவரது காதலுக்கு உதவியதாக கூறப்படும் சம்பவத்தின் அடிப்படையில் சிறுமிக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அண்மையில் தெரியவந்துள்ளது. கம்பளை, மவுன்ட் டெம்பிள் காலனியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவியான நிபுனி நுவந்திகா பண்டார (14) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 13ஆம் திகதி கம்பளை அங்கம்மன பிரதேசத்தில் உள்ள சித்தப்பாவின் வீட்டிற்கு சித்தப்பாவின் மகள் மற்றும் தாயாருக்கு துணையாக இருக்க சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு சில நாட்கள் அங்கு இருந்த பின்னர் , கடந்த 19ம் திகதி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அதன் பின்னர் சிறுமி பல முறை வாந்தி எடுத்துள்ள நிலையில், சித்த்ப்பா தன்னை அடித்ததாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமி தனது சித்தப்பாவின் மகளின் காதல் விவகாரம் குறித்த தகவலை மறைத்ததாக கூறப்படுகிறது. கடந்த 21ஆம் திகதி அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அன்று காலை சிறுமியின் தந்தையும் அவளைத் தாக்கியுள்ளார்.
பின்னர் வீட்டார் சிறுமியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதும், அவரது தந்தை அதற்கு அனுமதி வழங்காத நிலையில் மதியம் 2 மணியளவில் சிறுமி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் நுவந்திகாவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதேசவாசிகள் பலரும் வருகை தந்திருந்தனர்.
இரண்டு சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பெண்ணான நுவந்திகாவின் பிரிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.