சர்வதேச விமானச் சேவைகளை குறைக்கிறது ஏர் இந்தியா!
விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக சர்வதேச வழித்தடங்களில் நஷ்டம் ஏற்படுவதால், எதிர்வரும் ஜூலை மாதம் வரை சர்வதேச விமானச் சேவைகளைக் குறைக்க ஏர் இந்தியா தீர்மானித்துள்ளது.
இது குறித்து ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் தெரிவிக்கையில்,
ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் விமான நிறுவனம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் வான்வெளி மூடலால் மேலும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
இதனால் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான விமான அட்டவணையைத் திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மற்றும் சில வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால் பல சர்வதேசச் சேவைகள் இலாபமற்றதாக மாறியுள்ளன.
சர்வதேச விமானங்களுக்கான ஏவியேஷன் டர்பைன் ஃபியூயல் எனப்படும் விமான எரிபொருள் விலை 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது அதிகரிப்பாகும்.
டெல்லியில் சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு 1511.86 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
எனினும், உள்நாட்டு விமான எரிபொருள் விலையில் இந்த முறை மாற்றம் செய்யப்படவில்லை இத்தகைய காரணங்களால் எதிர்வரும் ஜூலை மாதம் வரை சர்வதேச விமானச் சேவைகளைக் குறைக்க ஏர் இந்தியா தீர்மானித்துள்ளது.