காலன் வாயிலிருந்து மகனை மீட்ட தாயார்; பேரறிவாளன் கைது முதல் விடுதலை வரை!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை விடுவித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதிரடி உத்தரவிட்டு உள்ளனர்.
சுப்ரீம் கோர்ட் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. அதேசமயம் இந்திய வரலாற்றில் சுப்ரீம் கோர்ட் இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதிலும் அரிதான விடயம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், பேரறிவாளன் வழக்கில் கவர்னர் செய்த கால தாமதம் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டது. பேரறிவாளன் விடுதலை மீது கவர்னர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியது.
28 மாதங்கள் இதில் முடிவு எடுக்காமல் இருந்தது தவறு. அவர் காலதாமதம் செய்தது தவறு. இதனால் அவரை விடுதலை செய்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட் வரலாற்று தீர்ப்பை வழங்கி உள்ளது.
இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு எப்பொழுதோ கிடைத்திருக்க வேண்டும், இது கால தாமதம் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கண்ணீருடன் கூறி உள்ளார் கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.
அவர் கொல்லப்பட்ட வழக்கில் 1991-ஆம் ஆண்டு பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 26 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜீவ் படுகொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிறப்பு நீதிமன்றம், நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கும் 1998-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் திகதி தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இதனையடுத்து சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 1999-ஆம் ஆண்டு மே 11-ஆம் திகதி மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனையைசுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. அதன் பின்னர் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமெனக் கோரி 4 பேரும் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு 1999-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் கருணை மனுக்களை கவர்னர் பாத்திமா பீவி கடந்த 1999-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தார். இந்நிலையில் கவர்னரின் உத்தரவை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட் , அமைச்சரவை முடிவின் மீதே கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தது. இதனையடுத்து கடந்த 2000-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
தொடர்ந்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பினர். இந்நிலையில் 2000-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை அப்போதைய ஜனாதிபதி த கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுக்களை நிலுவையில் வைத்தனர். இதன்பின்னர் பதவியேற்ற ஜனாதிபதி பிரதீபா பாட்டில், கடந்த 2011-ஆம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
அதன்பின்னர் 11 ஆண்டுகளுக்கு மேலாக கருணை மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மூவரையும் தூக்கிலிட தடை விதித்தது. பின்பு இந்தபின்பு குறித்த சுப்ரீம் கோர்ட்டில் சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி எழுவரும் விடுவிக்கப்படுவதாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். எனினும் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை அணுகி மத்திய அரசு தடையாணை பெற்றது. இந்த வழக்கு மத்திய – மாநில அரசின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு, எழுவரையும் 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லையென அறிவித்தது. இதன் பின்னர் 7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி, மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியது . இதனிடையே சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கை விசாரித்த ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூவர் அமர்வு 7 பேரை விடுவிப்பது தொடர்பாக 161-வது பிரிவின் கீழ் கவர்னர் முடிவெடுக்க வேண்டுமென தீர்ப்பளித்தது.
இதன்தொடர்ச்சியாக 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது. இந்நிலையில் சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல்நலக் குறைவால், பரோலில் வந்த பேரறிவாளன், தொடர் சிகிச்சை பெற வேண்டி இருந்ததால் , 10-வது முறையாக அவரது பரோல் நீட்டிக்கப்பட்டது. கடந்த மார்ச் 9-ஆம் திகதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
அதனைத்தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தது. அதில், பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும், விசாரணை வரம்பு தமிழ்நாடு எல்லையில் உள்ளதால் முடிவெடுக்க வேண்டிய அதிகாரமும் மாநில அரசுக்கே உள்ளதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும், கவர்னரின் சிறப்பு அதிகாரமான 161-ன் கீழ் முடிவெடுக்க எந்த தடையும் இல்லை எனவும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், டெல்லி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பேரறிவாளனை இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.