தந்தையால் தாக்கப்பட்டு நான்கு மாணவர்கள் காயம்!
புத்தளம், கற்பிட்டி கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் நான்கு மாணவர்கள் சக மாணவன் ஒருவரின் தந்தையால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
08 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 13 வயதுடைய மாணவனொருவரும் 09 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 14 வயதுடைய மூன்று மாணவர்களுமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
தந்தை கைது
09 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் மூவரும் தங்களது வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவன் ஒருவரைப் பலமாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குள்ளான சக மாணவன் சம்பவம் தொடர்பில் தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த தந்தை , மாணவர்களை அழைத்து அவர்களைப் பலமாகத் தாக்கியுள்ளார். சம்பவத்தில் மாணவர்களுடன் இருந்த 8 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 13 வயதுடைய மாணவன் ஒருவனும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சக மாணவனின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.