யாழில் பொலிஸாரின் அதிரடியால் கைதான நால்வர் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், அதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சட்ட நடவடிக்கை
இதன் ஒரு கட்டமாக, நேற்று (05) செம்பியன்பற்று பகுதியில் மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற ஒருவர் உழவு இயந்திரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, புல்லாவெளி – இயக்கச்சி காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சுற்றிவளைப்பின்போது, ஜேசிபி இயந்திரத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, பெருமளவிலான மணல் குவியல்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடமராட்சி கிழக்கில் பொலிஸாரின் அனுமதியுடன் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும்பண்டார தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்கும் பொலிஸார் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படுவது போன்று வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பொலிஸார் ஒருபோதும் ஆதரவளிப்பதில்லை எனத் தெரிவித்த அவர், இவ்வாறான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.