கிண்ணியா தாவரக் களப்பில் துர்நாற்றம்; ஆராய சென்றவர்களுக்கு ஷாக்!
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கண்டல் தாவரக் களப்பொன்றிலிருந்து, பெண் ஒருவரின் சடலம் இன்று (12) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் கிண்ணியா, கிரான் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

களப்புப் பகுதியில் வீசிய துர்நாற்றம்
கிண்ணியா கிரான் பகுதியில் வசித்து வந்த இவர், கடந்த ஜனவரி 8ஆம் திகதி பைசல் நகர் பகுதியில் உள்ள தனது பிள்ளைகளின் வீட்டுக்குச் செல்வதற்காக ஆற்றைக் கடந்து சென்றுள்ளார்.
அதன் பின்னர் அவர் வீடு திரும்பாத நிலையில், உறவினர்களால் கடந்த வியாழக்கிழமை (08) கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை குறித்த கண்டல் தாவரங்கள் நிறைந்த களப்புப் பகுதியில் வீசிய துர்நாற்றம் காரணமாக அப்பகுதி மக்கள் தேடுதலில் ஈடுபட்ட போது, அங்கு சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுத் தடுப்புப் பிரிவினர் வருகை தந்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.
குறித்த பெண் ஆற்றைக் கடக்கும்போது தவறி விழுந்து உயிரழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.