தமிழர் பகுதியில் அதிரடி கைதான முன்னாள் பொலிஸ் அதிகாரி ; இளைஞர்களுக்கு செய்த செயல்
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெலிகொம் அருகில் புதன்கிழமை (20) மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதானார்.

போதைப்பொருள்
50 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து 10 கிராம் 130 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் பணப்பை , ஒரு தொகை பணம், கைத்தொலைபேசி, என்பனவும் சந்தேக நபரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் குறித்த சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றிய போது போதைப்பொருள் தொடர்பிலான குற்றச்சாட்டில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பதுடன் இலங்கை பொலிஸில் இருந்து விலகும் போது பொலிஸ் சார்ஜன்ட் ஆக செயற்பட்டிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த சந்தேக நபர் அண்மைக்காலமாக அப்பகுதி இளைஞர்களுக்கு போதைப்பொருட்களை இரகசியமாக விநியோகித்து வருபவர் என பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும் இவ்விடயம் குறித்து சட்ட நடவடிக்கைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.