ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்று அவர் தமது ஆதரவைத் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் தேர்தல்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு தனது முழு ஆதரவை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற அமைப்பாளர் நியமனத்தின் போது தமக்கு பதவி வழங்கப்படாமை குறித்து லக்ஷ்மன் விஜேமான்ன நேற்றைய தினம் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவராக முன்னதாக லக்ஷ்மன் விஜேமான்ன பதவி வகித்துவந்தார்.
எனினும், நேற்றைய தினம் குறித்த பதவி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அமைப்பாளர் நியமன நிகழ்வில் நேற்று அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.