மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட முன்னாள் அமைச்சர்
விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் சிகிச்சைக்காக சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
விசேட வைத்தியர் ஒருவரின் பரிசோதனையின் பின்னர் அவர் மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி தொடர்மாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட T -56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.
மறுநாள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை நாளைய தினம் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.