அதிகாரிகளை எட்டு ஆண்டுகள் அலைய விட்ட வெளிநாட்டுப் பிரஜை கைது
சுமார் எட்டு ஆண்டுகளாக இலங்கை அதிகாரிகளிடம் இருந்து தப்பியிருந்த நைஜீரிய நாட்டவர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார்.
மதிப்புமிக்க பரிசுப் பொதிகள் இருப்பதாகவும் அவற்றை விடுவிக்கப் பணம் தேவை என்றும் பொய் கூறி, இலங்கை குடிமக்களிடம் சுமார் 15 இலட்சம் ரூபாயைப் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிபதி தனுஜா லக்மாலி ஜெயதுங்கவிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்தநிலையில், சந்தேகநபர் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தற்போது விசாரிக்கப்படும் பல வழக்குகளில் தொடர்புபட்டுள்ளதாக காவல்துறையினர் மன்றில் தெரிவித்தனர்.
இதனையடுத்து, வாதங்களைப் பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரை ஓகஸ்ட் 7 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.