மலையக உறவுகளுக்கான பாத யாத்திரை வவுனியாவில் ஆரம்பம்!
இருநூறு வருடங்களை மலையக உறவுகள் கடந்த நிலையிலும் இலங்கையில் அந்நிய உறவுகளாகவே நடாத்தப்படுகின்றனர்.
மலையகம் 200 விழா பலவாறு கொண்டாடப்பட்ட போதிலும் தொன்றுதொட்டு ஆட்சிபீடமேறிவருகின்ற அரசுகளால் இன்றுவரை அந்நிய உறவுகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.
இவ் உண்மை நிலையினை வெளியுலகிற்கு பறைசாற்றுவதற்காக “வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிடுவோம்!” எனும் தொனிப்பொருளில் பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதயாத்திரை தலைமன்னார் தொடக்கம் மாத்தளை வரை மேற்கொள்ளப்படவுள்ளது .
இப் பாதயாத்திரை கடந்த 29 ஆம் திகதி மக்கள் வலுக்கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் பேராதரவு கிடைத்துவருகின்றது.
பாதயாத்திரையின் 7 ஆம் நாளான இன்று (04.08.2023) அதிகாலை வவவுனியா நகரிலிருந்து புறப்பட்டுள்ளது. சர்வமத ஆசீர்வாதங்களுடன் சமூகம் சார் பொது அமைப்புகள், குரலற்ற மனிதர்களுக்காக குரலுயர்த்துகின்ற மனிதநேயத் தரப்புகள், குடிமக்கள் எனப் பலதரப்பினர்களினதும் ஒத்துழைப்புடன் இடம்பெற்று வருகின்றது.
இப் பாதயாத்திரை சுமார் 26 கிலோமீற்றர் தூரம் பயணித்து இன்று மாலை மதவாச்சியை அடையவுள்ளது.