இலங்கையில் சீரற்ற காலநிலையால் ஏற்படவுள்ள உணவுத்தட்டுப்பாடு!
நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் உணவு தட்டுப்பாடு அபாயத்தை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 70,000 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதுடன், தற்போது பல மாகாணங்களில் பெய்து வரும் அடை மழையினால் அறுவடைக்கு வரவிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளது. “என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“மழையினால் மரக்கறி பயிர்கள் மழையினால் அழிந்துள்ளன. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 15,000 ஏக்கர் பச்சைப்பயறும் முற்றாக அழிந்துள்ளது. நாட்டின் மொத்த பச்சைப்பயறு தேவையில் 40 வீதத்தை இந்த பயிர்ச்செய்கை மூலம் பெற்றுக்கொள்ள முடியும். ,” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தோட்டங்களில் மரக்கறிகளை பயிரிடுவதற்கான திட்டத்தையும், இந்தப் பருவத்திற்கான உணவுப் பயிர்த் திட்டத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், வானிலை மாற்றங்களினால் ஏற்பட்டுள்ள உணவுப் பயிர் சேதம் தொடர்பான அறிக்கையை விவசாய திணைக்களத்தினால் உடனடியாக வழங்குமாறும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.