தமிழர் பகுதியில் மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்கள்
மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மனித பாவனைக்கு உதவாத வகையில் சுகாதார சீர் கேடுகளுடன் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு மன்னாரில் உள்ள உணவகங்களுக்கு விற்பனைக்காக வழங்கப்பட்டு வந்த நிலையில், குறித்த உணவு தயாரிக்கும் பாழடைந்த வீட்டு இன்று (02) சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் உணவு பொருட்கள் தயாரிக்கப்படுவதாகும் அங்கு பாரிய துர்நாற்றம் வீசி வருவதாகவும்,
மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று காலை அப்பகுதிக்குச் சென்ற மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் தலைமையிலான குழுவினர் மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகுதி உணவுப் பொருட்களை கைப்பற்றினர்.
மன்னார் மூர்வீதியில் மக்கள் வசிக்க முடியாத நிலையில், காணப்பட்ட குறித்த வீட்டில் பாரிய அளவிலான உணவு பொருள்கள் தயாரிக்கப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது.
குறித்த பகுதியில் இருந்து மனித பாவனைக்கு உட்படுத்த முடியாத சுகாதார வசதிகள் எவையும் முன்னெடுக்கப்படாத நிலையில், உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தமை சுகாதார வைத்திய அதிகாரிகள் குழுவினரால் கண்டு பிடிக்கப்பட்டது.
பின்னர் அங்கு விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், அங்கிருந்து மனித பாவனைக்கு உதவாத வகையில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட ஒரு தொகுதி உணவுப் பொருட்களை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், எவ்வித அனுமதியும் இன்றி மனித பாவனைக்கு உதவாத வகையில் உணவு தயாரித்த குறித்த நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் தயாரிக்கப்படுகின்ற உணவுப் பொருட்கள் மன்னார் பகுதியில் உள்ள பல்வேறு உணவகங்களுக்கு விற்பனைக்காக வழங்கப்பட்டமையும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் தெரிவித்தார்.