அரசின் கெடுபிடிக்கு மத்தியில் உயிர்நீத்த உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலி
அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியில், இன்று முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆயத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுடரேற்றி வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், சமூகசெயற்பாட்டாளர் பத்மநாதன் சுபாகரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
அதேவேளை போரின் வடுக்களை தாங்கி நிற்கும் நந்திக்கடலிலும் அவர் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதன்போது, எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை மாவீரர் தினம் தொடர்பில் வடக்கு கிழக்கில் பல்வேறு தடைகளை அரசாங்கம் ஏற்படுத்தி வரும் நிலையில் , புலம்பெயர் நாடுகளில் மாவீரர் தினம் இன்று அனுக்ஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





