மாயமான மலையகத்தின் முதல் அம்மன் சிலை? எங்கு சென்றது; தொடரும் தேடல்!
இலங்கையில் ஜேம்ஸ் டெயிலர் என்ற வெளிநாட்டவரினால் செய்கை செய்யப்பட்ட தேயிலை இன்று சர்வதேச ரீதியில் சிலோன் டீ என்ற பெயரில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
1867ம் ஆண்டு ஜேம்ஸ் டெயிலர் தேயிலை செய்கையை ஆரம்பித்த நிலையில், அங்கு வேலை செய்வதர்காக இந்தியாவிலிருந்து தமிழர்களை அழைத்து வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
அப்போது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள், இலங்கை வரும் போது, முதல் முதலில் அம்மன் சிலையொன்றை கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது.
இவ்வாறு இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட தமிழர்கள், முதலில் கண்டி மாவட்டத்தின் லூல்கந்துர பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்கள் முதலில் அம்மன் ஆலயமொன்றை அமைத்து இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாக நம்பப்படும் வெங்கலத்திலான அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, தமிழர்கள் வழிபாடுகளை ஆரம்பித்துள்ளதாக அப் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், இந்தியாவிலிருந்து முதல் முதலில் கொண்டு வரப்பட்ட அம்மன் சிலை, பிற்காலத்தில் திருடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த அம்மன் சிலை இன்னும் மீட்கபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அம்மன் சிலை களவுபோனதை அடுத்து அந்த சிலையுடன் கொண்டு வந்ததாக கூறப்படும் கல் சிலைகளை ஆலயத்தில் வைத்து இன்றும் பிரதேச மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இவ் ஆலயம் கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆலயத்திற்கு அருகில் மிக அழகான கருப்ப சாமி சிலையொன்று வைக்கப்பட்டு, பிரதேச மக்கள் வழிபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.