சமனல இயற்கை சரணாலயத்தில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் : பல ஏக்கர் வனப்பகுதி நாசம்
மஸ்கெலியா, சமனல இயற்கை சரணாலயத்தில் ஏற்பட்ட தீ தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சரணாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட 30 ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் ஹட்டன் வன பாதுகாப்பு காப்பாளர் தெரிவித்துள்ளார்.
நல்லதன்னியவில் உள்ள வாலமலை தோட்டத்திற்கு அருகில் 23 ஆம் தேதி மதியம் ஏற்பட்ட தீ, அப்பகுதியில் நிலவிய மிகவும் வறண்ட வானிலை காரணமாக, காப்புக்காடு முழுவதும் வேகமாகப் பரவியதாக தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு நடவடிக்கை
லக்சபான இராணுவ முகாம், வன பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் நல்லதன்னிய பொலிஸ் அதிகாரிகள் பரவி வந்த தீயைக் கட்டுப்படுத்த முயன்ற போதிலும், மலைகளின் உச்சியில் பரவிய தீயைக் கட்டுப்படுத்துவது கடினமாக காணப்பட்டது.
எனவே, இலங்கை விமானப்படையின் பெல் 412 ஹெலிகாப்டரின் உதவியுடன் மவுஸ்ஸாகல நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு, 11 முறை தண்ணீர் தெளித்து தீ கட்டுப்படுத்தப்பட்டது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, சரணாலயங்களுக்கு தீ வைக்கும் நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், தனது அலுவலகத்திற்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்குமாறுஹட்டன் வன பாதுகாப்பு காப்பாளர் தெரிவித்துள்ளார்.