பொலிஸில் போலியாக முறைப்பாடு பதிவு
நீர்கொழும்பு பொலிஸில் போலியாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்து ஆவணங்கள் தயாரித்து 4 பிரதிகளை பெண் ஒருவருக்கு வழங்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் சிவில் படையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் எதிராக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
விசாரணை
இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் போலி முறைப்பாட்டைப் பதிவு செய்து அதன் பிரதிகளை நீர்கொழும்பு முன்னக்கரை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.