பிரான்ஸில் ஏசி வாங்குவதற்கு மக்கள் கடும் போட்டி !
ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில், பிரான்சில் அடுத்தடுத்து தாக்கி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, ஏசி வாங்குவதற்கு மக்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
குறிப்பாக, அங்குள்ள ‘லிடில்’ சூப்பர் மார்க்கெட்டுகளில் மலிவு விலை ஏசிகளை வாங்குவதற்காக மக்கள் முண்டியடித்ததில் பல இடங்களில் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் வரவழைக்கப்படும் அளவிற்கு சூழல் மோசமடைந்தது.

நீண்ட வரிசையால் தள்ளு முள்ளு
பிரான்சில் உள்ள மற்ற கடைகளில் ஒரு சாதாரண ஏசி சுமார் 1,200 யூரோக்களுக்கு விற்கப்படுகிறது. ஆனால், லிடில் சூப்பர் மார்க்கெட்டில் அடிப்படை ஏசி மொடல்கள் வெறும் 179 யூரோக்கள் என்ற சலுகை விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தகவலைக் கேட்டு நூற்றுக்கணக்கான மக்கள் கடைகளின் முன்னால் குவியத் தொடங்கினர். பாரிஸின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய லிடில் கடைக்கு வெளியே 200-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஆனால், அந்தக் கடைக்கு வெறும் இரண்டு ஏசிகள் மட்டுமே விற்பனைக்கு வந்ததாகக் ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த இரண்டு கடைகளுக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். "நீங்கள் கலைந்து செல்லாவிட்டால் கடையைத் திறக்க மாட்டேன்" என்று முகாமையாளர் ஒருவர் கத்தும் அளவிற்கு அங்கு பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
அதேவேளை பாரிஸின் புறநகர்ப் பகுதிகளான செவ்ரான் மற்றும் லிவ்ரி-கார்கன் ஆகிய இடங்களிலும் இதே நிலைதான் நீடித்தது.