வீட்டுக்குள் நுழைந்த நபர்களால் பெண்கொலை; கணவர் படுகாயம்
வீட்டினுள் கொள்ளையடிக்க நுழைந்த கும்பலொன்று வயோதிப தம்பதியரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் 74 வயதுடைய வயோதிபப் பெண் உயிரிழந்ததோடு, பெண்ணின் கணவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கொள்ளைச்சம்பவம் எஹலியகொடை, அராபொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.
கை, கால்களை கட்டிபோட்டு கொள்ளை
வீட்டில் வயோதிப கணவரும் (வயது 76) மனைவியும் மட்டுமே வசித்துவருவதுடன் அவர்களது இரு பிள்ளைகள் வெளிநாட்டிலும், ஒரு மகள் களனி பிரதேசத்திலும் தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் , வயதான மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்ததோடு, வீட்டின் குளியலறைக்கு அருகில் கணவரையும் தாக்கி, கை, கால்களை கட்டிபோட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சொத்துக்களை கொள்ளையடிப்பதற்காகவே வீடு புகுந்து இந்த கும்பல் தம்பதியரை தாக்கிக் கொலை செய்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தாக்குதலில் எஹலியகொடை அராபொல நதுரன பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்து எஹலியகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணின் கணவர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஆவார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் எஹலியகொடை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.