யாழில் ஒரு சில பெண் - ஆண் மரண விசாரணை அதிகாரிகளில் திருவிளையாடல்!
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சில பெண் மற்றும் ஆண் மரண விசாரணை அதிகாரிகள், மரணத்தில் இலஞ்சம் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரான்ஸுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, பணமோசடியில் ஈடுபட்ட மரண விசாரணை அதிகாரி ஒருவர் பருத்தித்துறையில் வைத்து சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
15 லட்சம் ரூபா பணமோசடி செய்தார் என அவருக்கு எதிராக யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த மரண விசாரணை அதிகாரியை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் ஒரு தொகைப் பணத்தைத் திரும்ப வழங்கியதைத் தொடர்ந்து அவரைப் பிணையில் நீதிமன்றம் விடுவித்தது.
இவ்வாறானவொரு நிலையில், யாழில் உள்ள ஒரு சில பெண் மற்றும் ஆண் மரண விசாரணை அதிகாரிகள் மரணத்தில் இலஞ்சம் தேடும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
இறந்த உடலங்கள் மீது விரைவாக மரண விசாரணைகளையும், உடற்கூற்று பரிசோதனைகளையும் எதிர்பார்த்து மக்களும் இலஞ்சம் வழங்க வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்படுகின்றனர்.
தவறான முடிவெடுத்து மரணிப்பவர்களின் மரண விசாரணைகளை மேற்கொள்ளும் போது, அந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குறித்த மரண விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கும்போது, மக்களும் வேறு வழியின்றி இலஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்படுகின்றனர்.
அத்தோடு, இறப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதிலும் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறான சம்பவம் ஒன்று சமீபத்தில் கூட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாகவும் மற்றும் மேலிடங்களுக்கு முறைப்பாடு வழங்கியும் எந்தவிதமான பிரயோசனமும் கிடைக்கவில்லை என அறியமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.