இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்; அம்பியூலன்ஸில் பெண் ஊழியர் பாலியல் துஷ்பிரயோகம்!
விபத்தில் சிக்கி காயமடைந்த நபரொருவரை 1990 அம்பியூலன்ஸ் சேவை மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர், அம்பியூலன்ஸில் இருந்த பெண் ஊழியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பனாகொடை இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விபத்தில் சிக்கிய சகோதரன்
சந்தேக நபரான இராணுவ சிப்பாயின் சகோதரன் ஒருவர் ஹொரணை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, காயமடைந்தவரை 1990 அம்பியூலன்ஸ் சேவை மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்கையில் சந்தேக நபரான இராணுவ சிப்பாயும் அம்பியூலன்ஸில் ஏறியுள்ளார்.
இதன்போது, சந்தேக நபரான இராணுவ சிப்பாய் அம்பியூலன்ஸில் இருந்த பெண் ஊழியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் தெரிவித்ததையடுத்து, இராணுவ சிப்பாய் பொலிஸ் அதிகாரியையும் வைத்தியசாலையின் அதிகாரி ஒருவரையும் அச்சுறுத்தியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந் நிலையில், சந்தேக நபர் அதிக மது போதையிலிருந்துள்ளதாக தெரிவித்த ஹொரணை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.