மனைவியை அழைத்து வா; மூன்று பிள்ளைகளை தவிக்கவிட்டுச்சென்ற தந்தை!
மனைவியை அழைத்து வா, இல்லையேல் என் பிள்ளைகளையும் பொறுப்பெடுத்துக் கொள் எனக்கூறி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயணியக காரியாலயத்தில் தந்தையொருவர் மூன்று பிள்ளைகளை விட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வயது, 6 வயது மற்றும் 10 வயதான பிள்ளைகளையே இவ்வாறு தந்தை விட்டுச்சென்றதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம், தங்கல்ல வெளிநாட்டு வேலை பயணியக காரியாலயத்திலேயே இடம்பெற்றுள்ளது.
குழந்தைகளை பொறுப்பெடுத்த பொலிஸார்
இந்நிலையில் அனாதரவாக விடப்பட்ட பிள்ளைகள் மூவரும் பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். பிள்ளைகளின் தயார், கடந்தவருடம் ஜூலை மாதம், வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய மனைவியையே மீள அழைத்துவருமாறு அவரது கணவன் இதற்கு முன்னரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அவரது முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலங்கொட பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த நபர் , பிள்ளைகள் மூவரையும் வேலைவாய்ப்பு பயணியக அலுவலகத்தில் விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.