போதையில் பேருந்தை செலுத்திய ஏழு பேருக்கு நேர்ந்த கதி
போதைப்பொருள் பயன்படுத்தி தனியார் பயணிகள் பேருந்துகளில் கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும் பிலியந்தலை நகரின் ஊடாக பயணிக்கும் தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் அருந்தியுள்ளனரா என பரிசோதிக்கப்பட்ட பின்னர் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
இந்த பரிசோதனைகள் பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்தில் வைத்து, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் விசேட பேருந்து ஒன்றின் உள்ளே மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது 170 பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நுகேகொடை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் மற்றும் பிலியந்தலை பொலிஸார் இணைந்து சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு அண்மித்த காலம் இந்த பரிசோதனையை முன்னெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.