அரசிடம் விளைப்பொருட்களை விற்க தயங்கும் விவசாயிகள்!
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டதன்படி அதிகபட்ச கொள்முதல் விலையில் நெல் கொள்முதல் செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராக இருந்தாலும், தனியார் வர்த்தகர்கள் அதிக ஈரப்பதம் கொண்ட நெல்லுக்கும் சிறந்த விலையை வழங்குவதால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அரசுக்கு விற்க தயங்குகிறார்கள்.
அரசாங்கம் வழங்கும் விலையை விட அதிக விலைக்கு தனியார் வர்த்தகர்களுக்கு நெல் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை அம்பாந்தோட்டை பிராந்திய முகாமையாளர் டி. இந்திக உபேந்திரா தெரிவித்தார்.
நெல்லிற்கான விலை
அரசாங்கம் சரியான ஈரப்பதம் கொண்ட 01 கிலோ நாடு வகை சார்ந்த நெல்லிற்கு 120 ரூபாய் மற்றும் சம்பா வகை சார்ந்த நெல்லிற்கு 125 ரூபாய் என விலையை அறிவித்தது.
இதற்கிடையில், ரிதியகம மற்றும் பெரேகம பகுதிகளில் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் தனியார் வர்த்தகர்கள் அதிக ஈரப்பதம் கொண்ட நெல் 01 கிலோவிற்கு 120 ரூபாய் வழங்குவதாகவும், அறுவடை செய்யும் இடத்திற்கே வந்து பெற்று கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசிடம் விற்பனை செய்யும் விவசாயிகள் நெல்லை தாமே காயவைத்து, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் இதன் போது அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரமான நெல்லுக்கு தனியார் வர்த்தகர்களால் வழங்கப்படும் 120 ரூபாய் விலை போதுமானது என விவசாயிகள் குறிப்பிடுவதாகும் அவர் சுட்டிக்காட்டினார்.