கடன் வாங்கிய மகன் தலைமறைவானதால் குடும்பத்துடன் தற்கொலை செய்த விவசாயி!
இந்தியா ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் கடன் தொல்லை காரணமாக விவசாயி தனது குடும்பத்தினருடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியை அடுத்த ராசா பாலம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரின் தந்தை சங்கரையா, தாய் குருமா, தம்பி வினய் ஆகியோர் அருகில் உள்ள கிராமத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சதீஷ் தனது சொந்த கிராமத்தில் ஒருவரிடம் கடன் வாங்கி உள்ளார்.
அதனை திருப்பி கொடுக்க முடியாததால் பணம் கொடுத்தவர் கொடுத்த அழுத்தத்தினால் ஊரை விட்டு வெளியேறி உள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் அருகில் உள்ள கிராமத்தில் தாய் தந்தையரிடம் சதீஷ் பெற்ற கடனை குறித்து கேட்டுள்ளார். அவர்கள் மகனைத் தேடி தருவதாகவும் சிறிது காலம் பொறுத்து கொள்ள வேண்டும் என கேட்டுள்ளனர்.
எனினும் கடன் கொடுத்தவர் அநாகரீகமாக பேசி தொல்லை கொடுத்ததனால் மன உளைச்சலில் இருந்த குடும்பத்தினர் நேற்று இரவு பயிர்களுக்குப் பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை மூவரும் அருந்தியுள்ளனர்.
இது குறித்து அறிந்து கொண்ட அந்த கிராம மக்கள் அவர்களை புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மூவரும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கடன் கொடுத்தவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மகன் பெற்ற கடனுக்காக குடும்பமே உயிரை மாய்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.