மதுபானப் போத்தல்களில் போலி ஸ்டிக்கர்: விடுக்கப்பட்டுள்ள அதிரடி பணிப்புரை
நாட்டிலுள்ள மதுபானப் போத்தல்களில் ஒட்டப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கர்களில் போலியானவற்றை வாடிக்கையாளர்களும், இலங்கை மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகளும் இலகுவில் அடையாளம் காணும் வகையில் தற்பொழுது உள்ள கையடக்கத்தொலைபேசி செயலியை மேம்படுத்துமாறு நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக, பாதுகாப்பு ஸ்டிக்கர் தயாரிப்பு நிறுவனத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது சந்தையில் உள்ள மதுபானப் போத்தல்களில் ஒட்டுப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் போலியானவையா அல்லது உண்மையானவையா என்பதைக் கண்டறிவதற்கு உரிய பொறிமுறை இல்லாமை குறித்து சுட்டிக்காட்டியிருந்தது.
இது தொடர்பில் மேலும் விசாரிக்கும் நோக்கில் வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாட்டலி சம்பிக ரணவக்க தலைமையில் இன்றைய தினம் (10-08-2023) நாடாளுமன்றத்தில் கூடியது.
மதுபானப் போத்தல்களுக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர் அறிமுகப்படுத்தினாலும் இலங்கையில் உள்ள அனைத்து மதுபானத் தயாரிப்பாளர்களாலும் இது பயன்படுத்தப்படாமை தொடர்பில் குழு அதிருப்தியை வெளியிட்டிருந்தது.
குறித்த ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தாத 4 நிறுவனங்கள் இருப்பதாக மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட மதுபானப் போத்தல்களை மீட்பதற்கு மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புக்களின் விபரங்கள், கையகப்படுத்தப்பட்ட மதுபான உற்பத்தி மற்றும் விநியோகம் செய்த நபர்கள் தொடர்பில் செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்குமாறும் குழுவின் தலைவரினால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.