பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விடுத்த எச்சரிக்கை!
சமூக ஊடகங்கள் வழியாக பரவி வரும் மோசடி முயற்சிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில், அறிமுகமானவர்களிடமிருந்தும் அறிமுகமற்றவர்களிடமிருந்தும் பகிரப்படும் போலியான சலுகைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி தொடர்பான தனிப்பட்ட தகவல்களை கோராது
இந்த மோசடிகளில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயர், லோகோ மற்றும் பிராண்ட் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், சமூக ஊடகங்கள் மூலம் எந்த நிலையிலும் பணம், OTP (One-Time Password), கிரெடிட் கார்ட் விபரங்கள், வங்கி தகவல்கள் அல்லது ஏதேனும் நிதி தொடர்பான தனிப்பட்ட தகவல்களை கோராது என தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே பயணிகள், எந்தவொரு சலுகையையும் பயன்படுத்தும் முன், அது நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.srilankan.com , http://www.srilankan.com வழியாக வெளியிடப்பட்டதா அல்லது சரிபார்க்கப்பட்ட (verified) சமூக ஊடக கணக்குகள் வழியாக பகிரப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது மோசடிக்காரர்கள் வழக்கத்திற்கு மாறான எழுத்துக்கள் அல்லது சந்தேகமான இணைப்புகள் (links) பயன்படுத்துவதுடன், போலியான சமூக ஊடக கணக்குகள் மூலம் நிறுவனத்தை போலியாகக் காட்ட முயற்சிப்பதையும் நிறுவனம் எச்சரித்துள்ளது.
எனவே சமூக ஊடகங்களில் பரவும் இத்தகைய மோசடிகளைத் தவிர்க்க பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், சந்தேகமான தகவல்களை உடனடியாகப் பகிராமல் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவுறுத்தியுள்ளது.