ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தொடர்பில் பகிரப்படும் போலிக்கடிதம்
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் திலித் ஜயவீர, அதிலிருந்து விலகுவதாக கூறி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் கடிதம் போலியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அதில் சர்வஜன சக்தியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதாக திலித் ஜயவீர அறிவித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் கடிதம்
இருப்பினும் தற்போது இத்தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை என அவர் , சர்வஜன சக்தி கூட்டணிக்கு அறிவித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் கடிதமொன்று பகிரப்பட்டு வருகிறது.
இதன் உண்மைத்தன்மை குறித்து Fact Seeker ஆராய்ந்து பார்த்ததில், அத்தகைய தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும், மேற்கூறப்பட்டவாறு பகிரப்படும் கடிதம் போலியானது எனவும் திலித் ஜயவீரவின் கட்சியான தாயக மக்கள் கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஹேமகுமார நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை மேற்கூறப்பட்டவாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கடிதம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார் என ஆரம்பத்தில் கருதப்பட்ட தம்மிக்க பெரேரா, தான் களமிறங்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டு வெளியிட்ட கடிதத்தின் மாற்றியமைக்கப்பட்ட பிரதி எனவும் Fact Seeker தெளிவுபடுத்தியுள்ளது.