போலியாக தயாரிக்கப்பட்ட அரச முத்திரைகள் ; அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கொழும்பு பிரதான நீதவான் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளை போலியாக தயாரித்து தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட பிரியந்த ரத்நாயக்க மற்றும் காணிப் பதிவு அலுவலக ஊழியர்களாகப் பணியாற்றியவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விளக்கமறியல் உத்தரவு
நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், நீதிமன்றத்திடம் பெறப்பட்ட சோதனைக் கட்டளைக்கு அமைய முதலாவது சந்தேகநபரின் வீடு சோதனையிடப்பட்டதாகத் தெரிவித்தனர்.
அங்கு "கொழும்பு நீதவானுக்காகப் பதிவாளர்" எனத் தயாரிக்கப்பட்ட இந்த நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ முத்திரை ஒன்று மீட்கப்பட்டதாக குறிப்பிட்ட அதிகாரிகள், அதற்கு மேலதிகமாக போலியாகத் தயாரிக்கப்பட்ட காணிப் பதிவு அலுவலகம், நோட்டரிமார்கள், வைத்தியர்கள், அதிபர்கள், மாநகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் பெருமளவிலான உத்தியோகபூர்வ முத்திரைகளும் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தனர்
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, சந்தேகநபர்களை ஜூலை 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.