மக்களின் உயிரோடு விளையாடும் தனியார் மருத்துவமனைகள் !
நாடளாவிய ரீதியில் உள்ள தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, காலாவதியான மற்றும் மனித பயன்பாட்டிற்கு தகுதியற்ற மருத்துவ ஆய்வகப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) தெரிவித்துள்ளது.
நுகர்வோரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் தேசிய மட்டத்தில் 52 விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

பல மருத்துவ நிறுவனங்கள் கடுமையான விதிமுறை மீறல்
இந்த ஆய்வுகளின் போது, பல மருத்துவ நிறுவனங்கள் கடுமையான விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, தற்போது பயன்பாட்டில் உள்ள பொருட்களுடன் சேர்த்து காலாவதியான ஆய்வகப் பொருட்களையும் அவை சேமித்து வைத்துள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட தகுதியற்ற பொருட்களில், குருதி குளுக்கோஸ் பரிசோதனை கருவிகள் (Blood Glucose Testing Kits), ஆய்வக இரசாயனங்கள்,
டெங்கு கண்டறிதல் சோதனை கருவிகள் (Dengue Diagnostic Test Kits), இதய நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஜெல் (Gels), சாயக் கரைசல்கள் (Dye Solutions) மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் இதர ஆய்வகப் பொருட்கள் அடங்குகின்றன.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் விசாரணை அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தவறிழைத்த நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இத்தகைய திடீர் சோதனைகள் நாடளாவிய ரீதியில் தொடரும் எனவும் அதிகார சபை மேலும் அறிவித்துள்ளது.