பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் ; முன்னாள் இராணுவச் சிப்பாய்க்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
அனுராதபுர போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவர், தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்துப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு, மேல் நீதிமன்றத்தினால் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்த சந்தேகநபரான முன்னாள் இராணுவச் சிப்பாயின் பிணை உத்தரவை இரத்து செய்யுமாறு, வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இந்திக அத்தநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
குறித்த குற்றத்தைப் போன்றதொரு மற்றுமொரு வழக்கில், கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அச்சந்தேகநபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அநுராதபுர மேல் நீதிமன்றத்தினால் முன்னர் வழங்கப்பட்டிருந்த பிணை உத்தரவையே நீதிபதி இவ்வாறு இரத்து செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு, செவ்வாய்க்கிழமை (17) அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, அரச தரப்பு சார்பில் மன்றில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி விடயங்களை முன்வைக்கையில், “குறித்த பெண் வைத்தியரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில், மேல் நீதிமன்றத்தினால் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்த போது, பிரதிவாதி அக்குற்றச்செயலைப் போன்றதொரு குற்றமொன்றைப் புரிந்துள்ளார்.
இக்குற்றச்சாட்டில் கல்னேவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார். அதனையடுத்தே முன்னாள் இராணுவ சிப்பாயின் பிணை இரத்துச்செய்யப்பட்டுள்ளது.