அனுர அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் பயங்கரம்
நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் பயங்கரமாகத் தோன்றுவதாகக் குறிப்பிட்டார்.
விசேடமாக, அரசாங்கம் தற்போது கல்வித்துறையையும் சீர்குலைத்துள்ளதாகக் குற்றம் சுமத்திய அவர், நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவித்தார்.
அரசாங்கத் தரப்பினர் கடினமாக உழைப்பதாகக் கூறிக்கொண்டாலும், நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அரசாங்கத்தின் மின்கட்டண அதிகரிப்புத் திட்டம் குறித்து வினவியபோது, அது பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு சுமை என அவர் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனப் பல தரப்பினரால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்கள் வினவியபோது, அது பற்றித் தான் எவ்விதக் கருத்தையும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்து அந்தப் பதிலைத் தவிர்த்துக்கொண்டார்.
நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவுவதாகவும், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.