யாழ் வலி. வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள காணிகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள காணிகளில் சில பகுதிகளை ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் தற்போது பயணிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் காணிகள்
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக வட மாகாணத்தில் மக்களுடைய தனியார் காணிகள் பாதுகாப்பு தேவைக்காக பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த நிலையில் மக்களுடைய காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனை கொண்டு ள்ளோம்.
வலி வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள தனியார் காணிகளை படிப்படியாக உரியவர்களுக்கு பெற்று கொடுக்கும் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் வலி வடக்கின் சில பகுதிகளை மக்களிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்துள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாண விமான நிலையம், காங்கேசன் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்ட வருகின்ற நிலையில் வடபகுதி கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்காக விசேட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.