யானையும் கூட பேரா வாவியில் குளிக்க வேண்டியிருக்கும்; ரணிலுக்கு எச்சரிக்கை!
ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆசி வழங்கிய பௌத்த மதத் தலைவர்கள் இலங்கையின் தேசிய நெருக்கடி குறித்து எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், ரணில் நேற்று மாலை பௌத்த மதத் தலைவர்கள் பலரைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர், நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண தேவையான சீர்திருத்தங்களை அமுல்படுத்தத் தவறினால் புதிய பிரதமரும் பொதுமக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என பிக்குகள் எச்சரித்தனர்.
“சமீபத்திய சம்பவங்களைப் போலவே, யானையும் பேரா வாவியில் குளிக்க வேண்டியிருக்கும்,” என்று அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவிடம் சுட்டிக்காட்டினர், அத்துடன் தேசத்தின் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கு செவிசாய்க்குமாறு அவரை வலியுறுத்தினர்.
கொழும்பில் அமைதியான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, கோபமடைந்த பொதுமக்களால் பல ராஜபக்ச விசுவாசிகள் பேரா வாவியில் மூழ்கடிக்கப்பட்டதை அடுத்து இந்த எச்சரிக்கை பிரதமருக்கு விடுக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .