தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம் செய்தவர் கொரோனாவால் பலி
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம் செய்த பிரசாரகர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அமெரிக்காவை சேர்ந்த மத போதகர் மார்கஸ் லாம்ப் (Marcus Lamb). இவர், மதத்தை பரப்புவதற்காகவே தனியாக டிவி சேனல் நடத்தி வந்தார். இந்நிலையில் அவர் தனது நிகழ்ச்சிகளில், கோவிட் தடுப்பூசிக்கு எதிராகவே பேசி வந்ததுடன், கோவிட் தடுப்பூசி உண்மையில் தடுப்பூசியே அல்ல என்றும் அது சோதனை முயற்சி எனவும் அது அபாயகரமானது என கூறினார்.
எனினும் அவரது இந்த கருத்தினை அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மறுத்து வந்தது. தடுப்பூசி பாதுகாப்பானது, அதனை போட்டவர்கள் உயிரிழப்பது அரிதானது. தடுப்பூசி போடாதவர்கள் உயிரிழப்பு என்பது 11 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளதாக விளக்கமளித்தது.
இந்நிலையில், நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த மார்கஸ் லாம்ப் (Marcus Lamb), ரத்தத்தில் சர்க்களை அளவு அதிகரித்ததாலும், ஆக்சிஜன் அளவு குறைந்ததாலும் மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கோவிட் உறுதியானது. அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மார்கஸ் லாம்ப் (Marcus Lamb) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேவேளை மார்கஸ் லாம்ப் (Marcus Lamb) கோவிட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, கடந்த 23ம் தேதி டிவி நிகழ்ச்சியில் அவரது மகன் ஜோனாத்தன் லாம்ப் பேசுகையில்,
தனது தந்தை கோவிட்டால் பாதிக்கப்பட்டது, எதிரிகள் ஆன்மிக ரீதியில் நடத்திய தாக்குதல் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை என்றார். அதோடு தொற்றுநோய் மற்றும் கோவிட் சிகிச்சைக்கான சில வழிகள் பற்றி அனைவருக்கும் தெரிவிக்க எனது பெற்றோர் மருத்துவமனை சென்றுள்ளனர்.
இதனால், எதிரிகளுக்கு சந்தோஷம் ஏற்படவில்லை என்பதிலும் சந்தேகம் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.