எரிசக்தி அமைச்சர் இராஜினாமா; அமைச்சரைத் தேடும் அரசாங்கம்
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த அமைச்சுப் பதவிக்குத் தற்போதைய அமைச்சரவையிலிருந்து ஒருவரையே நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தரக்குறைவான நிலக்கரியைக் கொள்வனவு செய்தமை தொடர்பில், எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் தோற்கடித்ததுடன், எரிசக்தி மோசடி மற்றும் அதனை நிவர்த்திப்பதற்கான விளக்கமொன்றையும் ஜனாதிபதி வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், நிலக்கரி விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்கு இடமளிக்கும் வகையில் தாம் பதவி விலகுவதாக அறிவித்து, எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தனது பதவியை இராஜினாமா செய்தார். இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம், அமைச்சர் ஒருவர் பதவியை இராஜினாமா செய்யும்போது, அப்பதவிக்கு உரிய நபர் நியமிக்கப்படும் வரை குறித்த அமைச்சின் பொறுப்புகளை ஜனாதிபதியே வகிப்பார்.
இந்நிலையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரையே எரிசக்தி அமைச்சுப் பதவிக்கு நியமிக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.