ஊழியர்களின் பணத்தை மோசடி செய்து போதைப்பொருள் கொள்வனவு!
நாட்டின் பல பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்குச் சென்று ஊழியர்களின் பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் கொட்டாவை பொலிஸாரால் இன்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரத்மலானை, கல்கிஸ்ஸை, மஹரகம, திஸ்ஸமஹாராமை போன்ற பொலிஸ் நிலையங்களில், குறித்த மோசடிகள் பற்றிய முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் பல்வேறு வர்த்தக நிறுவனங்களுக்குச் சென்று அங்குள்ள காசாளர்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து நுட்பமான முறையில் பணத்தைப் பெற்று, போதைப்பொருள் வாங்குவதற்குச் செலவிட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர் இன்று (19) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.