இலங்கையை உலுக்கிய கோர விபத்து ; அதிர்ச்சிதரும் புகைப்படங்கள்
இலங்கையை உலுக்கிய எல்ல கோர விபத்தில் பேருந்தானது 1000 அடி பள்ளத்தில் விழுந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
சுற்றுலா சென்ற தங்காலை மாநகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்து எதிரே வந்த ஜீப்புடன் மோதியதுடன், வீதி பாதுகாப்பு வேலியையும் இடித்துச் சென்றுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 9 பெண்களும் 6 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதேவேளை 11 ஆண்களும் 7 பெண்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 05 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார், இராணுவம், விமானப்படை, தீயணைப்புத் திணைக்களம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து விபத்தில் சிக்கியவர்ளை மீட்டனர். விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸில் 30க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், பஸ் விபத்து நடந்த இடத்தில் இருந்த மோசமான நிலைமைகள் காரணமாக, அந்தக் குழுவை மீட்க பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.