வவுனியாவில் 30 வயது மதிக்கத்தக்க யானைக்கு நேர்ந்த சோகம்!
வவுனியா - செட்டிகுளம் முசல்குத்தி பகுதியில் உள்ள வீதியில் மின்சாரம் தாக்கி 30 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று உயிரிழந்த நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது.
செட்டிகுளம், முசல்குத்தி பகுதியில் உள்ள வயல் நிலங்களில் போடப்பட்ட மின்சாரக் கம்பியில் சிக்கிய காட்டு யானை அப் பகுதியில் விழுந்து உயிரிழந்துள்ளது.
அப் பகுதிக்கு சென்றவர்கள் இதனை அவதானித்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் கால்நடை வைத்திய அதிகாரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை பார்வையிட்ட போது யானை உயிரிழந்து கிடந்துள்ளது.
வயல் நிலங்களுக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே குறித்த யானை மரணமடைந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், யானையின் மரணம் தொடர்பில் கால்நடை வைத்திய அதிகாரியால் உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.