நாளை தேர்தல் முடிவுகள்; விஜய் தொடர்பில் மாணிக்கம் தாகூர் கணிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் அடுத்த முதலமைச்சர் யார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், நாளை வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை முன்னிட்டு தனது தொகுதியில் முகாமிட்டு செயல்பட்டு வருகிறார்.
தேர்தல் நிலை குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், இம்முறை தேர்தல் வழக்கத்திற்கு மாறாக விஜய் அரசியலுக்கு வந்ததன் மூலம் இளைஞர்களிடையே அரசியலின் மீதான ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
பொதுவாக அரசியலில் அக்கறை குறைவாக இருக்கும் இளைஞர்கள் கூட இம்முறை அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
விஜய்யின் பிரசாரங்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டதை பார்க்க முடிந்ததாகவும், குறிப்பாக 49 வயதிற்குட்பட்ட வாக்காளர்கள் பலர் விஜய் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டார்.
இதனால், தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தாக்கம் நிச்சயமாக காணப்படும் என்றும், அதேவேளை அ.தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, வைகோ மற்றும் த.வெ.க. உள்ளிட்ட கூட்டணிகள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், இது திடீர் மனமாற்றம் அல்ல என்றும், இளைஞர்களின் மாற்றமான அரசியல் பார்வையை தற்போது தான் பலர் புரிந்துகொண்டு வருகிறார்கள் என்றும் கூறினார்.
மேலும், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்த இளைஞர்களின் எழுச்சி தொடர்பாகவும், அவர்களில் ஒரு பகுதி விஜய்யை நோக்கி நகர்ந்தது இயல்பான மாற்றமே எனவும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விளக்கம் அளித்தார்.