தேர்தலுக்கான திகதி தீர்மானம் ; தேர்தல்கள் ஆணைக்குழுவின் முடிவு
அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாகவே தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும். வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்ததன் பின்னரே தேர்தலுக்கான வாக்கெடுப்பு திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைத்த யோசனைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். அரசியலமைப்பின் பிரகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக தீர்மானம் எடுப்போம்.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம்,கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் பண்டிகை கால விடுமுறை தொடர்பில் எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் தமது நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளார்கள்.
உள்ளூராட்சி மன்ற அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரல் மற்றும் திகதி வாக்கெடுப்பு திகதி தொடர்பில் ஆளும் தரப்பினர் தமது நிலைப்பாட்டை குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் தேர்தல் திகதி குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை.அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாகவே தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும்.
வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்ததன் பின்னரே தேர்தலுக்கான வாக்கெடுப்பு திகதி அறிவிக்கப்படும். அனைவருக்கும் சாதகமான வகையில் தான் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் போதுமான காலவகாசம் வழங்கப்படும் என்றார்.