வவுனியாவில் அரச அதிகாரியால் முதியோர்களுக்கு நேர்ந்த நிலை!
வவுனியா மாவட்டத்தில் மழைக்கு மத்தியில் முதியோர் மற்றும் சிறுநீரக கொடுப்பனவு பெற வந்த மக்களை நீண்ட நேரம் காத்திருக்கச் செய்து சமுர்த்தி உத்தியோகத்தர் அலைக்கழிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இன்று (19-12-2022) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பட்டானிச்சூர் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு, முதியோர் கொடுப்பனவு மற்றும் சிறுநீரக கொடுப்பனவு என்பன இன்று காலை வழங்கப்படும் எனவும், மக்களை கிராமசேவையாளர் அலுவலகத்திற்கு வருகை தருமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
இதற்கு அமைவாக மழைக்கு மத்தியிலும் முதியவர்கள், நோயாளர்கள் என பணத்தை பெற பலர் வந்த நிலையில், காலை 10.30 மணிக்கு பின்பே குறித்த இடத்திற்கு வருகை தந்த சமுர்த்தி உத்தியோகத்தர் முதியோர் கொடுப்பனவு மட்டும் ஒரு தொகுதியினருக்கு சமுர்த்தி உத்தியோகத்தரினால் வழங்கப்பட்டதுடன், சிறுநீரக நோயாளர்கள் உட்பட ஏனையவர்கள் பணம் பெற முடியாத நிலையில் ஏமாற்றதுடன் திரும்பிச் சென்றனர்.
கடும் மழைக்கு மத்தியில் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் முதியவர்களையும், நோயாளர்களையும் அலைக்களிக்காது அரசாங்கம் வழங்கும் உதவியை சரியான முறையில் வழங்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரியுள்ளார்.
இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.