எல் நினோ நிலை ; மார்ச் - ஏப்ரலில் மின்னுற்பத்திக்கு பேராபத்து
நாட்டில் நிலவும் எல் நினோ நிலைமையால் அடுத்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மின்னுற்பத்திக்கு ஓரளவு பாதிப்பு ஏற்படக் கூடுமென வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
பெட்டரி வலுசக்தியை பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று (17) இதுதொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையில் இதனைக் குறிப்பிட்ட அவர் மேலும் கூறுகையில்,

பெட்டரி வலுசக்தி மின்னுற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை
அதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் 160 மெகாவோட் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் முன்னெடுக்கப்படவுள்ளது.
அந்தக் கட்டமைப்பினூடாக செப்டெம்பர் மாதத்தில் 130 மெகாவோட் மற்றும் ஒக்டோபர் மாதத்தில் 10 மெகாவோட் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோன்று தனியார் பிரிவினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணக் கூடியதாக இருந்தால் மேலும் 50 மெகாவோட் வரையிலான மின்னை தேசியக் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
இதற்கிடையில், பெட்டரி கட்டமைப்பினூடாக 250 மெகாவோட் மற்றும் 150 மெனாவோட் மின்சாரத்தை தேசிய கட்டமைப்புக்கு இணைத்துக்கொள்வதனூடாக எல்நினோ நிலையை எதிர்கொள்வது மாத்திரமல்லாமல் மின்னுற்பத்தியையும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டினார்.