ஈழத் தமிழர் நீதி வேண்டுகோள் ; மல்கம் கார்டினல் ரஞ்சித் மீது குற்றச்சாட்டு
நாட்டின் கத்தோலிக்கத் தலைமையான மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை, தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனவழிப்புக்களுக்கு மௌனமாக செயல்பட்டார் என்ற பெரும் குற்றச்சாட்டு தமிழ் சமூகத்தினால் முன்வைக்கப்படுள்ளதாக சமூக வலைத்தள பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் ரோமன் கத்தோலிக்கப் பீடத்தில், கொழும்பு உயர்மறைமாவட்டம் தலைமையாக செயல்பட்டு வருகிறது.
இந்தத் தலைமைப்பீடத்தின் கீழ் பன்னிரண்டு மறைமாவட்டங்கள் இயங்குகின்றன. கொழும்பு உயர் பேராயராக செயல்படும் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை, நாட்டின் கத்தோலிக்க தலைமை அதிகாரியாக திகழ்கிறார்.
தமிழ் சமூகத்துக்கிடையில், யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பில் சேவையாற்றும் நான்கு தமிழ் ஆயர்கள் – ஜஸ்டின் ஞானப்பிரகாசம், அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், நோயல் இம்மானுவேல், மற்றும் அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் – தங்கள் சமூகத்தோடு ஒட்டியிருந்த செயல்பாடுகளால் பெருமையாக கருதப்படுகின்றனர்.
அவர்களின் முன்னோடியாக, மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் ராயப்பு யோசப் ஆண்டகை, இலங்கையில் நடந்த யுத்த குற்றங்கள், குறிப்பாக 2009ம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் படுகொலை உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐ.நா மற்றும் LLRC போன்ற அமைப்புகளுக்கு ஆதாரங்களை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் தனது வாழ்க்கையை தமிழ் மக்களின் நீதிக்காக அர்ப்பணித்தவர்.
இதன் மாறாக, நாட்டின் கத்தோலிக்கத் தலைமையான மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை, தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனவழிப்புக்களுக்கு எந்தவிதமான கண்டனமும் தெரிவிக்காமல், மௌனமாக செயல்பட்டார் என்ற பெரும் குற்றச்சாட்டு தமிழ் சமூகத்தினால் முன்வைக்கப்படுகிறது.
2009 யுத்தத்தில் அமைதியாய் இருந்தவர், ஈஸ்டர் தாக்குதலுக்கான வெளிநாட்டு விசாரணைகளை இன்று வலியுறுத்துகிறார் என்பது எதிரொலிக்கிறது.
இலங்கை கத்தோலிக்கத் தலைமையின் மௌனத்தின் பின்னணியில், தற்போது தமிழ் ஆயர்கள் வத்திக்கானுக்கு நேரில் சென்று, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஜோர்ஜ் மாரியோ பெர்கோக்லியோ அவர்களை சந்தித்து, தமிழர் மீது நடைபெற்ற அநீதிகளையும், மத அடிப்படையிலான அரசியல் குத்தகைகளையும், மனித உரிமை மீறல்களையும் உலக சமூகம் முன் நேரடியாக எடுத்துரைக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் மனவுறுதியான வேண்டுகோள்.
இலங்கை அரசின் மீதான சர்வதேச அழுத்தத்தை உருவாக்கவும், தமிழர்களுக்கான நீதி நிலைநாட்டவும், தமிழ் ஆயர்கள் தங்கள் ஆன்மீகப் பொறுப்பினை உணர்ந்து, துரிதமாக செயல்பட வேண்டிய நேரம் இது.