நியூசிலாந்தில் இலங்கையரின் தாக்குதல் எதிரொலி; புதிய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றம்
இலங்கையரின் தாக்குதல் எதிரொலியை அடுத்து தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிடுவதை சட்டவிரோதமாக்கும் புதிய பாதுகாப்புச் சட்டத்தை நியூசிலாந்து நிறைவேற்றியுள்ளது.
செப்டம்பர் 3ம் திகதி நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருக்கும் Countdown Lynnmall சூப்பர் மார்க்கெட்டில் இலங்கையர் கத்தி குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் சமப்வ இடத்திலே சுட்டுக் கொன்றனர். இத்தாக்குதலின் மூலம் நியூசிலாந்தின் பாதுகாப்புச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் அம்பலமானது. எனினும், விரைவில் கடுமையான புதிய பாதுகாப்பு சட்டம் அமுல்படுத்துப்படும் என நாட்டின் பிரதமர் Jacinda Ardern உறுதியளித்தார்.
இந்நிலையில், நேற்றிரவு, புதிய பாதுகாப்புச் சட்டத்தை நியூசிலாந்து நிறைவேற்றியுள்ளது. புதிய சட்டத்தின் படி, நியூசிலாந்தில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்டசட்டம் பயங்கரவாத செயல்களைத் திட்டமிடுதல் மற்றும் தயாராவதை தடுக்கும் நடவடிக்கைக்காக எந்தவித வாரண்டும் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் நுழைய, சோதனை செய்ய மற்றும் யாரையும் கண்காணிக்க பொலிஸாருக்கு அதிகாரம் அளிக்கிறது. அத்துடன் , பயங்கரவாத நோக்கங்களுக்காக ஆயுதங்கள் அல்லது போர் பயிற்சியில் ஈடுபடுவதை சட்டவிரோதமாக்குகிறது.
இது குறித்து நியூசிலாந்தின் நீதி அமைச்சர் Kris Faafoi கூறுகையில், பயங்கரவாதத்தின் தன்மை தற்போது மாறிவிட்டதாகவும் உலகெங்கிலும் தீவிரவாத குழுக்களை விட தனி நபர்கள் தான் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.